Wednesday, October 7, 2015

ஆங்கில ஆண்டு

ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் என்றால் லீப் வருடத்தில் 366 நாட்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும். இது ஏன்?


சூரியனை பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியானது சூரியனை சுற்றி முடிக்க 366 நாட்களை எடுத்துக் கொள்கிறதா என்று கேட்டால் அப்படி இல்லை.
.
மிகச் சரியாகக் கணக்கிட்டால் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிஷம், 46 வினாடி ஆகின்றது. இந்த அடிப்படையில் நாம் ஆணடைக் கணக்கிட்டுக் கொள்ள் முடியாது. ஆகவே முழு எண்களாக 365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். நமது காலண்டர் அவ்விதமாகத் தான் உள்ளது.


சூரியனை பூமி ஒரு முறை சுற்றி முடிப்பதை ஓர் ஆண்டு என்கிறோம்
ஆனால் இந்த கூடுதல் நேரத்தை (5 மணி 48 நிமிம், 46 வினாடி) கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டால் அது சேர்ந்து கொண்டே போய் பிரச்சனையை உண்டாக்கும். அதாவது அக்கினி நட்சத்திரம் மே மாதத்தில் (சித்திரை மாதம்) வருவதற்குப் பதில் ஜூன், ஜூலை மாதங்களில் வர ஆரம்பிக்கும்.

ஆகவே நமது காலண்டரும் இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்) கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டாலும் கணக்கு சரியாக வருவதில்லை.

ஏனெனில் நாம் கூடுதலாக 11 நிமிஷம் 14 வினாடியை சேர்த்துக் கொண்டு விடுகிறோம். கணக்குப் பார்த்தால் இது 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி ஆகிவிடுகிறது. ஆகவே 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் கிடையாது.

அப்படிச் செய்தாலும் கணக்கு உதைக்கிறது. 5 மணி 17 வினாடி குறைந்து போய்விடுகிறது. ஆகவே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம். 1600 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 2000 ஆண்டு லீப் வருடமாக இருந்தது. 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களே. அதேபோல் 2012 ஆம் ஆண்டும் லீப் வருடமே.

நாம் பயன்படுத்தும் காலண்டருக்கு - அதாவது ஆண்டுக் கணக்கு - கிரிகோரியன் காலண்டர் என்று பெயர். நாம் இதை ஆங்கில ஆண்டு என்கிறோம்.

இப்போது நாம் பயன்படுத்தும் காலண்டரில் சீர்திருத்தம் செய்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. இப்போது இருக்கின்ற ஏற்பாடே மேல் என்ற நிலை தான் உள்ளது.

நடை முறையில் நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில ஆண்டு சூரியனை வைத்துக் கணக்கிடப்படுவதால் இதை சூரியமான ஆண்டுக் கணக்கு என்றும் கூறலாம். சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் ஆண்டும் சூரியமான ஆண்டே ஆகும்.

உலகில் எவ்வளவோ வகையான காலண்டர்கள் உள்ளன. மாயன் (Mayan) காலண்டர் அவற்றில் ஒன்று. இந்த மாயன் காலண்டர் சம்பந்தப்ப்ட்ட ஒரு விஷயத்தையும் மற்றும் பல விஷயங்களையும் முடிச்சுப்போட்டு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 -41 மணிக்கு உலகம் அழியப் போவதாக வழக்கமாகப் பீதி கிளம்பும் கும்பல் அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நேராது என வானவியல் நிபுணர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்!

Wednesday, September 2, 2015

தர்மத்தின் சிறப்புகள்

குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 55

அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..
அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 660

இறந்தவருக்காக தர்மம்
ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 1388, 2756

வங்கியில் வளரும் தர்மம்
அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1410

பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்
"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல்: புகாரி 6539
மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு
"ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 1425, 2065

சிறந்த தர்மம் எது?
"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1426

இறுக்கினால் இறுகி விடும்
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.
அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
நூல்: புகாரி 1433, 1434

இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1442

சுவனத்தின் ஸதகா வாசல்
"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1897

மரம் நடுதல்
ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 2320

உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி
நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், "ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி),
நூல்: புகாரி 2592

அல்லாஹ் சொல்லும் சேதி
"ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5352

தர்மமே நமது சொத்து
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 6442

அல்லாஹ்வின் மன்னிப்பு
மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 6679

பத்ருப்போர்

பத்ருப் போரில் கலந்து கொள்ளாத முஸ்லிம்கள்
கஅப் பின் மாலிக் (ரலி)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வாணிபக் குழுவை (வழி மறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி (3951)
அனஸ் பின் நள்ர் (ரலி) என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் நள்ர்-ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), "(இணை வைப்பவர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த் திருப்பான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் :புகாரி (4048)
ஹுதைஃபா(ரலி), அல்யமான் (ரலி)
நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்'' என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் "நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது' என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி),
நூல் : முஸ்லிம் (3661)
வாகனங்கள்
இணைவைப்பவர்களிடம் இருந்த அளவுக்கு வாகன வசதிகள் நபிகளாரிடம் இருக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்குக் கூட வாகனங்கள் இருக்கவில்லை. மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்கே வாகனங்கள் இருந்தன. எனவே மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் இரண்டு நபர்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வருவார்கள். பின்னர் ஒருவர் இறங்குவார். நடந்து வந்தவர் ஏறிக் கொள்வார். இப்படி முறைவைத்து பத்ரை நோக்கி பயணம் செய்தனர்.
நாங்கள் பத்ரு நாளன்று மூன்று நபர்கள் ஒரு ஒட்டகத்தில் பயணித்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுடன் செல்பவர்களாக இருந்தனர். அப்போது அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம். (நீங்கள் ஒட்டகத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் என்னைவிட வலிமை வாய்ந்தவர்களும் அல்ல. நான் உங்களைவிட நன்மை பெறுவதில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் : அஹ்மத்(3706)
பத்ருப் போர் அன்று மிக்தாத் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் குதிரை வீரராக இல்லை.
அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : அஹ்மத் (973)
பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில்
முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) "கிப்லா'வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
"இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்'' என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 3621)
நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, "(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, "போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்'' என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, "இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (4877)
உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.
(அல்குர்ஆன் 8:11)
நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மரத்தின் அடியில் அழுது கொண்டு காலை வரை தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
நூல் : அஹ்மத் (973)
நேருக்கு நேர்
பத்ருப் போர்களத்தில் எதிரிகளை முஸ்லிம்கள் நேருக்கு நேர் சந்தித்தார்கள். அப்போது மக்காவிலிருந்து வந்தவர்களிடம்தான் முதலில் போரிடுவோடும் என்று இணைவைப்பவர்கள் கூறியதால் முஹாஜிர்கள் முதலில் அவர்களிடம் போர் செய்ய சென்றனர்.
உத்பா பின் ரபீஆவும் அவன் மகனும் மற்றும் அவனுடைய சகோதரனும் (போரிட) முன்னர் வந்தனர். (அதில் உத்பா) யார் நேரிடையாக மோதத் தயார்? என்று கேட்டான். அப்போது அன்சாரி இளைஞர்கள் முன் வந்தனர். நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள் (நாங்கள் அன்சாரிகள் என்ற) விவரத்தைத் தெரிவித்தனர். உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் எங்கள் தந்தையின் உடன் பிறந்தவர்களிடம் (முஹாஜிர்களிடம் மோதவே) நாடுகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். ஹம்சா எழுந்திரும். அலீ எழுந்திரும். உபைதா பின் அல்ஹாரிஸ் எழுந்திரும் என்று கூறினார்கள். ஹம்சா அவர்கள் உத்பாவிடமும் நான் ஷைபாவிடமும் மோதினேன். உபைதாவும் வலீதும் மாறிமாறி வெட்டிக் கொண்டனர். ஒருவர் மற்றவரை காயமுறச் செய்தார். பின்னர் நாங்கள் வலீதை தாக்கி கொன்றோம். உபைதாவை சுமந்து சென்றோம்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : அபூதாவூத் (2291)
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங்கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான் தான் முதல் நபராக இருப்பேன்
கைஸ் பின் உபாத் அவர்கள் கூறினார்கள்: "இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்'' என்னும் (22:19) இறை வசனம், பத்ருப் போரின் போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.
நூல் : புகாரி (3965)
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், "அலீ(ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்களா?'' என்று கேட்டார். ("ஆம். கலந்து கொண்டார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்'' என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நூல் : புகாரி (3970)
எதிரிகள் குறைந்த எண்ணிக்கையானார்கள்
எதிரிகளிடம் வீரத்தோடும் தன்னம்பிக்கையோடும் போர் செய்ய வேண்டும் என்பதற்கு அல்லாஹ் எதிரிகளின் எண்ணிக்கை குறைவாக தெரியும்படி ஆக்கினான்.
நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும். (அல்குர்ஆன் 8:44)
அம்பெய்தல்
பத்ருப் போரின் போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்ற போது நபி (ஸல்) அவர்கள், "(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உஸைத் (ரலி),
நூல் : புகாரி (2900) (புகாரி)
சுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது, "நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்தமாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே'' என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்த போது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன். நூல் : புகாரி (3721)
வானவர்களின் உதவி
இணைவைப்பவர்களை தோற்கடிக்க அல்லாஹ் வானத்திலிருந்து வானவர்களை இறக்கி உதவி புரிந்தான். வானவர்கள் எதிரிகளை கடுமையாக தாக்கி இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.
(அல்குர்ஆன் 8:9)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், "இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (3995)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார்.
உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.
உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.
நூல் : முஸ்லிம் (3621)
உமைய்யா கொல்லப்படுவான் என்ற முன்னறிப்பு
சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும் போது சஅத் (ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆவான். உமய்யா, "நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமே'' என்று கேட்டான். அவ்வாறே, சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்தபோது அபூஜஹ்ல் வந்து, "கஅபாவை வலம் வருவது யார்?'' என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், "நான் தான் சஅத்'' என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், "(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "ஆம் (அதற்கென்ன?)'' என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், "அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்'' என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்'' என்று சொன்னார்கள். அப்போது உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், "உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்'' என்று சொல்லத் தொடங்கினான்...அவர்களைப் பேச விடாமல் தடுக்கலானான்... ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் கோபமுற்று, "உம் வேலையைப் பாரும். (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், நான் முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'' என்று உமய்யாவிடம் சொன்னார்கள். அதற்கு அவன், "என்னையா (கொல்லவிருப்பதாகச் சொன்னார்?)'' என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், "ஆம் (உன்னைத் தான்)'' என்று பதிலளித்தார்கள். அவன், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை'' என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, "என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?'' என்று கேட்க, அவள், "என்ன சொன்னார்?'' என்று வினவினாள். "முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதாக அவர் கூறினார்'' என்று அவன் பதிலளித்தான். அவள், "அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பொய் சொல்வதில்லை'' என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)த போது உமய்யாவிடம் அவனது மனைவி, "உம்முடைய யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?'' என்று கேட்டாள். ஆகவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூஜஹ்ல் அவனிடம், "நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். ஆகவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய் விட்டால் நன்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்து கொள்)'' என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாட்களுக் காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்று விட்டான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி (3632)
உமைய்யா கொல்லப்படுதல்
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி உமைய்யா பத்ருப் போரில் கொல்லப்பட்டான். இவன் பிலால் (ரலி) அவர்களின் விரோதியாகவும் இருந்தான்.
“மக்காவிலுள்ள என் உறவினர்களையும்க சொத்துக்களையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்’ என்றும் “மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) “அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, “”ரஹ்மானை நான் அறியமாட்டேன்; அறியாமைக் காலத்து உமதுபெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ரு என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, “இதோ உமையா பின் கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்.) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தான். (அதனால் ஓட இயலவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், “குப்புறப்படுப்பீராக!’ என்ற கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.
“அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்கு காட்டினார்!” என்று அவருடைய மகன் கூறுகிறார்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி).
நூல் : புகாரி (2301)
இணைவைப்பு தலைவர்கள் கொல்லப்படுதல்
பத்ருப் போரில் இணைவைப்பவர்களின் பெரும் பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அபூஜஹ்ல் உட்பட நபிகளாரும் பெரும் தீங்கிழைத்த தலைவர்களின் தலைகள் அனைத்தும் பத்ருப் போரில் உருண்டது.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், "(பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கூறிவிட்டு, "இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்துவிட வேண்டும். (யார் இதற்குத் தயார்?)'' என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக்கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள்அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்கள்:
"இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, "அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!'' என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எவர்களுக்கெதிராகப் பிராத்தித்தார்களோ ஒருவர் நீங்கலாக) அவர்கள் அனைவரும் பத்ருப்போர் நாளில் (உடல் உப்பி நிறமாறி) உருமாறி மாண்டு கிடந்ததையும் பின்னர் "கலீபு பத்ர்' எனும் பாழுங் கிணற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் :புகாரி (520)
அபூஜஹ்லைக் கொன்ற இரு இளைஞர்கள்
இஸ்லாத்தின் முதல் எதிரியாக இருந்த அபூஜஹ்லை அன்சாரித் தோழர்களான இரு இளைஞர்களே கொன்றனர். இந்த இளைஞர்கள் இதற்கு முன்னர் அபூஜஹ்லைப் பார்த்ததுகூட கிடையாது.
பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
"அவர்களைவிடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந் திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண்சாடை செய்து, "என் பெரிய தந்தையே! நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?'' என்று கேட்டார். நான், "ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!'' என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், "அவன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டே யிருப்பேன்)'' என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, "இதோ, நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!'' என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யார் அவனைக் கொன்றது?'' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், "நான் தான் (அவனைக் கொன்றேன்)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?'' என்று கேட்டார்கள். இருவரும், "இல்லை'' என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு, "நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) "அபூஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹுக்கு உரியவை'' என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),
நூல் :புகாரி (3141)
பத்ருப் போர் (நடந்த) நாளில், "அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ் ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, "அபூஜஹ்லே! நீயா?'' என்று கேட்டார்கள். (அப்போது) அவன், "தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.... அல்லது நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.... ஒருவன் உண்டா?'' என்று கேட்டான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் :புகாரி (3963)
பத்ருப் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், "நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?'' என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல் :புகாரி (3961)
கொல்லப்பட்ட முஸ்லிம்கள்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தோழர்கள் கொல்லப்பட்டார்கள். எதிர்கள் தரப்பில் பெரும் தலைவர்களும் மற்றும் பலரின் தலைகளும் உருட்டப்பட்டன.
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் :புகாரி (2809)
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் அவர்களிடம்) "எனக்கருகில் நீங்கள் அமர்ந் திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, "எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், "இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி),
நூல் : புகாரி (4001)
கொல்லப்பட்ட இணைவைப்பாளர்கள்
அபூஜஹ்ல் கூட்டத்தினரில் 70க்கும் அதிமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், (மலைக்கணவாயில்நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை(த்தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின் போது முஸ்லிம்களாகிய) எங்களில் எழுபது பேர்களை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி, மாறி தான் இறைக்க முடியும்)''
அறிவிப்பவர் : பரா (ரலி),
நூல் : புகாரி (3986)
கிணற்றில் போடப்பட்ட இணைவைப்பாளர்கள்
பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள்.
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும்அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர் களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?'' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)
நூல் : புகாரி (3976)
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) "இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுதுகொண்டிருக்கின்றனர்' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.
(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், "(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) "நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், "நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்'' என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.
அல்குர்ஆன் 27:80
(நபியே!) மண்ணறைகளில் இருப்ப வர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.
அல்குர்ஆன் 35:22
"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)'' என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள். நூல் : புகாரி (3978,3979)
கைதிகள்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்த நிலையில் சுமார் 70 நபர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களை என்ன செய்வது? என்று நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.
(அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இணை வைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம்.(மாறி, மாறி தான் இறைக்க முடியும்)''
அறிவிப்பவர் : பரா (ரலி),
நூல் :புகாரி (3986)
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?'' என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?'' என்று கேட்டார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரி களை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது'' என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் சொல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்'' (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
பிணைத் தொகை
பத்ருப் போரில் கைது செய்யப்பட்டவர்களை குறிப்பிட்ட தொகை பெற்றக் கொண்டு அவர்களை நபிகளார் விடுதலை செய்தார்கள்.
என் தந்தை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, "நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "தூர்' அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்'' என்று (என் தந்தை) கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஜுபைர்.
நூல் :புகாரி (3050)
சிறப்புகள்
பத்ருப் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தனி சிறப்புகளை கூறியுள்ளார்கள். அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகவும் சொர்க்கவாசிகளாகவும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத் திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : புகாரி (2809)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்)அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், "நீங்கள் "ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)'' என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப் பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், "கடிதம் (எங்கே? அதை எடு)'' என்று கேட்டோம். அவள், "எம்மிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உனது ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்'' என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீ பல்தஆ) அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), "ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாத வனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர் (களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத் தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக் கின்றனர்'' என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், "இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்'' என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்'' என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், "நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'... அல்லது "உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்'.... என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : புகாரி (3983)
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்'' என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ் ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3992)
கைஸ் பின் அபீ ஹாஸிம் அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), "(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிக மாக்கித் தருவேன்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (4022)
(ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார்; "அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ தவறாகச் சொல்கிறாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கிறார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : புகாரி (4908)
கனீமத்
பத்ருப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதால் எதிரிகளின் பொருட்கள் முஸ்லிம்களுக்கு பதிர்ந்தளிக்கப்பட்டது.
பத்ருப் போரின் போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி).
நூல் : புகாரி (3091)
உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரது மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா (ரலி) அவர்கள்) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், "பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குரிய நற் பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி (3130
இரு கைகளால் முஸாஃபாஹ் செய்யாலாமா
முஸாஃபஹா (கை கொடுத்தல்) பற்றி கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இது தொடர்பான இன்னும் சில மார்க்க சட்டங்களை இந்த இதழில் அறிந்துகொள்வோம்.
ஒருவர் மற்றவரை சந்திக்கும் போது தன் இரு கைகளையும் மற்றவரின் இரு கைகளோடு இணைத்து கைகொடுக்கும் வழக்கம் பரவலாக இன்றைக்கு பலரிடம் உள்ளது. ஆனால் இந்த செயலுக்கு நபிமொழிகளில் எந்த சான்றும் இல்லை. நபி (ஸல்) அவர்களோ அல்லது நபியின் காலத்தில் நபித்தோழர்களோ இம்முறைப்படி கைகொடுக்கவில்லை. மாறாக இவர்கள் காலத்தில் ஒரு கை கொடுக்கும் வழக்கமே இருந்துள்ளது.
நபித்தோழர்களின் காலத்திற்குப் பிறகு வந்தவர்களால் புதிதாக இப்படியொரு பழக்கம் உருவாக்கப்பட்டது. இமாம் புகாரி அவர்கள் இரு கைகளால் முஸாஃபஹா செய்வது பற்றி புகாரியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதற்கு அவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
இரு கைகளால் முஸாஃபஹா செய்தல் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழ் அவர்கள் முஸாஃபஹாவுடன் தொடர்பில்லாத வேறு ஒரு செய்தியை ஆதாரமாக காட்டியுள்ளார்கள். எனவே புகாரி இமாமின் கருத்தை நாம் ஏற்க முடியாது. ஆனால் ஹிஜ்ரி மூன்றாவது நூற்றாண்டிலேயே இப்படியொரு வழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
கடந்த இதழில் முஸாபஹா தொடர்பாக நாம் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே ஒரு கையால் முஸாஃபஹா செய்வதற்கும் ஆதாரங்களாக உள்ளது. அந்த ஹதீஸ்களை மறுபடியும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த ஹதீஸ்கள் எப்படி இந்தப் பிரச்சனைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது என்பதை மட்டும் அறிந்துகொள்வோம்.
ஹதீஸ்களில் முஸாஃபஹா என்ற சொல்லும் அதன் வேர்ச்சொற்களான ஸாஃபஹ தஸாஃபஹ போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளது. இந்த சொற்களுக்கு கைகொடுத்தல் என்று சுருக்கமாக நாம் தமிழில் மொழிபெயர்க்கின்றோம். இது அந்த சொற்களுக்குரிய முழுமையான மொழிபெயர்ப்பு இல்லை.
ஒருவர் தன் உள்ளங்கையை மற்றவரின் உள்ளங்கையுடன் இணைத்தைல் என்பதே இதன் முழுமையான பொருளாகும். அரபுச் சொற்களின் அர்த்தங்களை விவரிக்கும் பிரபலியமான நுலலான லிசானுல் அரப் என்ற நுலல் உட்பட பல நூற்கள் முஸாபஹா என்பதற்கு இது தான் பொருள் எனக் கூறுகின்றன.
لسان العرب - (2 / 512)
والمُصافَحةُ الأَخذ باليد والتصافُحُ مثله والرجل يُصافِحُ الرجلَ إِذا وضع صُفْحَ كفه في صُفْح كفه وصُفْحا كفيهما وَجْهاهُما ومنه حديث المُصافَحَة عند اللِّقاء وهي مُفاعَلة من إِلصاق صُفْح الكف بالكف وإِقبال الوجه على الوجه
முஸாஃபஹா என்றால் கையை பிடித்தல். ஒருவர் மற்றவரின் முகத்தை எதிர்நோக்கி தன் கையின் உட்பகுதியை மற்றவரின் கையின் உட்பகுதியுடன் இணைப்பதாகும்.
நூல் : லிசானுல் அரப்
(பாகம் : 2 பக்கம் : 512)
சுருக்கமாக சொல்வதென்றால் உள்ளங்கையை இணைத்தல் என்பதே முஸாஃபஹாவாகும். ஒரு கையை பிடிப்பதற்குத் தான் முஸாஃபஹா என்று சொல்லப்படும்.
இன்றைக்கு நடைமுறையில் இருப்பது போன்று இரு கைகளை கொடுத்தால் ஒரு கை மற்றவரின் உள்ளங்கையுடன் இணைந்திருக்கும். ஆனால் மற்றொரு கை மற்றவருடைய கையின் மேற்புறத்துடன் இணைந்திருக்கும். கையின் மேற்புறத்தை தொடுவதற்கு முஸாஃபஹா என்று சொல்லப்படாது.
மேலும் இரு கைகளால் முஸாபஹா செய்யும் போது முஸாஃபஹாவின் இன்னொரு ஒழுங்கும் மீறப்படுகின்றது. இரு கைகளை கோர்க்கும் போது ஒருவருடைய வலது கையின் உள்ளங்கையும் மற்றவரின் இடது கையின் உள்ளங்கையும் தான் இணைகின்றது. இருவருடைய வலது கையின் உள்ளங்கைகள் இணைவதில்லை. நற்காரியங்களை வலது கையால் செய்ய வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே மீறப்படுகின்றது.
எனவே இரு கைகளால் முஸாஃபஹா செய்வது கூடாது. ஒரு கையால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும்.
திரும்பிச் செல்லும் போது முஸாஃபஹா செய்யலாமா?
பொதுவாக முஸாஃபஹா என்பது இருவர் சந்திக்கும் போது செய்யும் காரியாகும். இருவரும் பார்த்துக்கொண்டது முதல் பிரியும் வரை சந்திப்பில் தான் இருக்கின்றார்கள். பிரிவதற்கு முன்பு முஸாஃபஹா செய்தால் இதுவும் சந்திப்பில் தான் செய்யப்படுகின்றது.
முஸாஃபஹா என்பது அன்பை வெளிப்படுத்துவதற்குரியச் செயல். அதை ஒரு சந்திப்பில் பல முறை செய்தாலும் அதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. சிலர் சந்தித்திலிருந்து பிரியும் வரை கையை பிடித்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் இடையிடையே கை கொடுப்பார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் போல் கை கொடுப்பார்கள். இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. இவற்றில் எதையும் நாம் தவறு என்று சொல்ல முடியாது.
ஒரு சந்திப்பில் ஒரு தடவை தான் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்று எந்த நிபந்தனையும் ஹதீஸ்களில் சொல்லப்படவில்லை. எனவே திரும்பிச் செல்லுவதற்கு முன் கைகொடுப்பது தவறில்லை.

குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் நம்மைக் கடந்து விட்டது. வழக்கம் போல நோன்பு, இரவுத் தொழுகை, தர்மம் போன்ற நன்மைகளையும் அம்மாதத்தில் செய்தாகி விட்டது. இறுதியாக பெருநாள் தொழுகையும் தொழுதாயிற்று. அவ்வளவு தான் இனி அடுத்த வருட ரமலானில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்போடு ரமலானில் செய்து வந்த இறைவணக்கத்திலிருந்து பெருவாரியான மக்கள் ஒதுங்கி விடுகின்றனர். திருக்குர்ஆன் இத்தகைய செயலைத்தான் நம்மிடம் எதிர்பார்க்கின்றதா?
 
ரமலானில் அதிகமாக நாம் குர்ஆனுடன் தொடர்பில் இருந்தோம். நாமே குர்ஆனை ஓதுவதின் மூலமாகவும், இரவுத் தொழுகையில் இமாமிடமிருந்து குர்ஆனைச் செவியேற்பதின் மூலமாகவும் ஏனைய மாதங்களை விட ரமலானில் குர்ஆனுடன் அதிகளவில் நெருங்கியிருந்தோம். அந்த நெருக்கம் நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
 
ரமலானில் அருளப்பட்ட திருக்குர்ஆன் நம்மிடையே பல வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
 
பொதுவாகவே குர்ஆன் முஸ்லிம்களிடையே பல அதிசயிக்கத்தக்க மாற்றங்களை எளிதாக உண்டாக்கி விடும். அது குர்ஆனின் தனிச்சிறப்பு.
 
அல்லாஹ் இதைப் பின்வருமாறு கூறுகிறான்.
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.
(அல்குர்ஆன் 39 23)
 
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5 83)
 
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் 8 2)
 
குர்ஆனை உளமாற செவியேற்றிடும் போது அது கண்களில் கண்ணீரை வரவழைப்பது, இறைநம்பிக்கையை அதிகப்படுத்துவது, மேனியைச் சிலிர்க்க செய்வது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்று இந்த வசனங்களில் இறைவன் தெரிவிக்கின்றான்.
 
முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் கண்டிப்பாக இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து திருக்குர்ஆன் என்பது வெறுமனே கேட்டுவிட்டு செல்வதல்ல, அது நமக்குள் பல தாக்கங்களை உண்டாக்க வேண்டும். இதை இறைவன் விரும்புகிறான் என்பதை அறியலாம்.
குர்ஆன் ஏற்படுத்திய தாக்கத்தை நபித்தோழர்களின் வாழ்க்கையில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
 
குர்ஆனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன் நபித்தோழர்களின் வாழ்க்கை முறையையும் குர்ஆனை ஏற்றுக் கொண்டதற்கு பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டால் குர்ஆனுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் அது அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களையும் காணலாம்.
நபித்தோழர்களின் முந்தைய நிலை
பல நபித்தோழர்கள் அறியாமைக் காலத்தில் மது, மாது, சூது, கொலை, அபகரிப்பு போன்ற தவறான செயல்களிலேயே தங்கள் வாழ்வை அமைத்திருந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதெனில் நரகில் நுழைக்கும் அனைத்து செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
 
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 3 103)
 
நபித்தோழர்களும் அல்லாஹ்வின் இவ்வசனத்திற்கேற்ப தங்களின் முந்தைய வாழ்வைப் பற்றி சான்றளித்துள்ளார்கள்.
 
முஸ்லிம்கள் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்ற போது அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் இணைவைப்பாளர்கள் நஜ்ஜாஷி மன்னரிடம் முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைச் சொல்கின்றனர். தங்கள் நிலை குறித்து விளக்க வேண்டிய சூழல் முஸ்லிம்களுக்கு நேருகிறது. முஸ்லிம்களின் சார்பில் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நஜ்ஜாஷி மன்னருக்கு விளக்கமளிக்கின்றார்கள். அப்போது தங்களின் முந்தைய நிலையை ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது அறியாமைக் காலத்தில் நாங்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். இறந்தவற்றைச் சாப்பிடுபவர்களாகவும், மானக்கேடானவைகளைச் செய்பவர்களாகவும் சொந்தபந்தங்களை முறித்து அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தோம். எங்களில் பலமானவர் வறியவரை (அபகரித்து அவரது பொருளை) சாப்பிட்டு வந்தோம். இந்நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் வந்து அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறும், உண்மை பேசுமாறும், சொந்த பந்தங்களை இணைத்து வாழுமாறும் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
(பார்க்க அஹ்மத் 1649)
 
இவ்வாறு வாக்குமூலம் அளிக்கின்றார்கள்.
அதாவது குர்ஆனை ஏற்றுக் கொள்ளும் முன் தங்கள் வாழ்க்கையில் தீமைகளுக்குப் பஞ்சமில்லை என்ற தங்களது நிலையைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
 
எனினும் குர்ஆனை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின் குர்ஆனின் போதனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதாவது குர்ஆன் அவர்களது வாழ்வில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்கு சில சம்பவங்களை உதாரணமாகக் காணலாம்.
 
மதுவிலிருந்து விலகல்
குர்ஆனை ஏற்றுக் கொள்ளும் முன் பல நபித்தோழர்கள் மதுவிலேயே ஊறித்திளைத்தனர். மது அருந்துவது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை எனுமளவு சர்வ சாதரணமாய் மது அருந்தும் பழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்கு வந்த பிறகும் கூட மது தடை செய்யப்படாததால் அதிலிருந்து முற்றாக விலகவில்லை. இந்நிலையில் இருந்தவர்களை குர்ஆன் எப்படி மாற்றியது?
இதை பின்வரும் நிகழ்விலிருந்து அறியலாம்.
 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் "ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்குச் செய்தி எட்டியதா?'' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், "என்ன அது?'' என்று கேட்டனர். அவர், "மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், "அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டி விடுங்கள்'' என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல்: புகாரி 4617
 
எப்போது மது அருந்துவது தடை என்பது குறித்த இறைவசனம் இறங்கியதோ அப்போதிலிருந்து அதிகமான நபித்தோழர்கள் அதிலிருந்து முற்றாக விலகினார்கள். மதீனா நகரமே கொட்டப்பட்ட மதுவால் நிரம்பி காட்சியளித்தது என்றால் குர்ஆன் அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றத்தை எளிதாக உணரலாம்.
 
நாமும் பல தீமைகளைச் செய்கிறோம். ரமலான் மாதம் வந்தால் அத்தீமைகளுக்கு சில நாட்கள் விடுப்பு கொடுத்து விட்டு ரமலான் முடிந்ததும் அவைகளைத் திரும்ப அழைத்துக் கொள்கிறோம். குர்ஆன் இதைத் தான் விரும்புகிறதா? அப்படியெனில் குர்ஆன் நம்மிடையே ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் இத்தகைய மாற்றங்களை திருக்குர்ஆன் நம்மில் ஏற்படுத்தி விடும். உண்மையான முஸ்லிம்களுக்கே திருக்குர்ஆன் பலனளிக்கும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.
அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
(அல்குர்ஆன் 51 55)
 
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நபித்தோழர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடைய வாழ்விலும் குர்ஆன் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
எம்மாதிரியான மாற்றங்களை இந்த நபித்தோழரின் வாழ்க்கையில் திருமறை ஏற்படுத்தியது என்பதைப் பின்வரும் செய்தியில் அவர் மூலமாகவே அறியலாம்.
 
அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?'' என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
 
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னை விட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்து விட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
 
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?'' என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்'' என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர்பார்க்கிறேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.
முஸ்லிம் 192
 
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் முதலில் நபிகளாரையே கொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குர்ஆனை ஏற்ற பின் நபிகளார் மீது எல்லையற்ற, அளப்பரிய நேசம் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்கள். நபிகளாரை நேசித்தது போன்று வேறு யாரையும் தான் நேசிக்கவில்லை எனுமளவு அந்த பிரியம் இருந்தது என்றால் திருக்குர்ஆன் அம்ர் (ரலி) அவர்களை எப்படி மாற்றியுள்ளது என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
காலித் பின் வலீத், அபூஸூஃப்யான்
குர்ஆன் யாரை? எப்படி மாற்றியது? எனும் இந்தப் பட்டியலில் இவர்களையும் விட்டு விட முடியாது.
 
ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தது மட்டுமில்லாமல் எதிரிகளின் மூளையாகவும் செயல்பட்டு நபிகளாரைக் கொல்ல சந்தர்ப்பம் தேடியவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தில் தங்களை இணைத்து, குர்ஆனை ஏற்றுக் கொண்ட பிறகு யாரது உயிரை எடுக்க காத்திருந்தார்களோ அந்த அண்ணல் நபி அவர்களுக்காக தங்கள் உயிரைக் கூட அர்ப்பணம் செய்ய முன்வருபவர்களாய் மாறினார்கள்.
 
இதில் பல நபித்தோழர்கள் அடங்குவார்கள் என்றாலும் காலித் பின் வலீத் (ரலி) குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
 
முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இணைவைப்பாளர்கள் சார்பில் முஸ்லிம்களை வேவு பார்க்கும் ஒற்றராகவும் காலித் (ரலி அவர்கள் செயல்பட்டார்கள். உஹது போர்க்களத்தில் முஸ்லிம்களைச் சிதறடித்ததில் காலித் பின் வலீத் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
(பார்க்க புகாரி 2732)
 
குர்ஆன் அவரை எப்படி மாற்றியது என்பது பற்றி நபிகளார் கூறிய செய்தியை பாருங்கள்.
“"(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் பின்ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்'' என்று நபி (ஸல்) கூறிக் கொண்டிருந்தபோது அவர்களது இரு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படாதிருந்த காலித் பின் வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது'' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல் : புகாரி 1246
 
இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று செயல்பட்டவரை இஸ்லாத்திற்காக தன்னுயிரை அர்ப்பணம் செய்யும் அளவிற்கு குர்ஆன் அவரை மாற்றியது என்றால் என்ன ஒரு அபார மாற்றம்?
இஸ்லாமிய அணி சார்பாக பல போர்களுக்கு படைத்தளபதியாக செயல்பட்டு பல வெற்றிகளை இறையருளால் அள்ளிக் குவித்தார்.
இறுதியில் நபிகளாரால் அல்லாஹ்வின் போர்வாள் என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.
(புகாரி 3757)
 
இப்படி குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடைக்கின்றன. அவற்றை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. இங்கே சொல்லப்பட்டவகளை விட சொல்லப்படாத செய்திகள் அதிகம் உள்ளது.
எண்ணற்ற நபித்தோழர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்களை அசாதரணமாக திருக்குர்ஆன் ஏற்படுத்தியது. ரமலானில் மட்டும் மாற்றம் என்றில்லாமல் அத்தகைய மாற்றங்களை நம் வாழ்விலும் எப்போதும் ஏற்பட வல்லோன் இறைவனை பிரார்த்திப்போமாக.

யார் இவர்? - அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான
அடையாளம் காணப்படும்.
4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர்.
5 திருமறைக் குர்ஆனின் (46:10) எனும் வசனம் இவர் விசயசத்தில் இறக்கப்பட்டது.
6 இவர் யூதர்களின் மத அறிஞராகவும் இருந்தவர்.
7 நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த தகவல் கேள்விப்பட்டு நபிகளாரைச் சந்தித்தவர்.
8 தவ்ராத்தில் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற செய்தியை யூதர்கள் மறைத்த செய்தியை போது வெளிப்படுத்தியவர்.
9 இவர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தரும் போது தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சந் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தார்.
10 இவர் யூதர்களில் பனூ கைனுகா' கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
11 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்வதற் காக தன்னுடை யூத மதத்தில் சொல்லப்பட்ட இறுதி நபிக்குரிய சில கேள்விகளைக் கேட்டவர்.
 
விடை: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
1 ஆதாரம் புகாரி 3813
3 ஆதாரம் புகாரி
5 ஆதாரம் புகாரி 3812
7.ஆதாரம் புகாரி 3329
9.ஆதாரம் புகாரி 3911
11 ஆதாரம் புகாரி 3911
2 ஆதாரம் புகாரி 3812
4 ஆதாரம் புகாரி 3329
6 ஆதாரம் புகாரி 3911
8 ஆதாரம் புகாரி 3635
10 ஆதாரம் புகாரி4028

Tuesday, August 25, 2015

யார் இவர்? - தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)

1 சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்,
2 இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார்
3உஹுதுப்போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர்
4 உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது.
5 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து வாழ்த்துத் சொன்னவர்களில் இவரும் ஒருவர்
6 இந்த நபித்தோழர் நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டவராவார்
7. இஹ்ராமின்போது வேட்டையாடப்பட்ட பிராணியை உண்பது பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்த நபித்தோழர்
8 சலமா பின் அல் அக்வஉ (ரலி) அவர்கள் இந்த நபித்தோழரின் உதவியாளராக இருந்துள்ளார்கள்
9 பேரீத்தமரங்களுக்கு மகரந்த சேர்க்கை செய்வது பற்றிய செய்தியை அறிவித்த நபித்தோழர்
10 இந்த நபித்தோழர் இடத்தில் ஒரு மனிதர் வந்து அபூஹரைரா (ரலி) அவர்கள் அதிகமான செய்திகளை அறிவிக்கிறார் என்று முறையிட்டார்
 
யார் இவர்? விடை
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
1. திர்மிதி 3748 2. புகாரி 4061
3. புகாரி 4061 4 புகாரி 4063
5. புகாரி 4418 6. முஸ்லிம் 3231
7. முஸ்லிம் 2252 8. முஸ்லிம் 3695
9. முஸ்லிம் 4711 10. திர்மிதி 3837

யார் இவர்? - உஸாமா பின் ஜைத் (ரலி)

1 நபி (ஸல்அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார்
2 நபி (ஸல்அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள்.
3 இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள்அனுப்பியிருந்தார்கள்.
4 மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்கஇவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது.
5  நபி (ஸல்அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு ஸஅத் பின்உபாதா (ரலிஅவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்
6 நபியவர்கள் இவர் சிறுவராக இருக்கும் போது இவரை ஒரு தொடையிலும் ஹசன் (ரலி)அவர்களை மறு தொடையிலும் வைத்து "இறைவாஇவர்கள் இருவர் மீதும் நான் அன்புசெலுத்துகிறேன்நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.
7 மக்கா வெற்றியின் போது நபியவர்களுடன் கஃபாவினுல் நுழைந்தவர்
8 மக்கா வெற்றியின் போது இவரை நபிகளாரின் ஒட்டகத்தின் மேல் ஏற்றிச் சென்றார்கள்
9 ஆயிஷா (ரலிஅவர்கள் மீது அவதூறு கூறிய நேரத்தில் ஆயிஷா (ரலி)அவர்களிடத்தில் நாங்கள் நல்லதைத் தவிர வேறதையும் அறியமாட்டோம் என்றுசொன்னவர்.

10  இவருடைய வீட்டில் நபிகளாரின் மனைவி ஸபிய்யா (ரலிஅவர்கள் அறை இருந்தது
விடை 
உஸாமா பின் ஜைத் (ரலி)
1. ஆதாரம் புகாரி (3730)  2. ஆதாரம் புகாரி (3730)
3. ஆதாரம் புகாரி (3730)  4. ஆதாரம் புகாரி (4304)
5. ஆதாரம் புகாரி (2988)  6. ஆதாரம் புகாரி (6003)
7. ஆதாரம் புகாரி (2988)  8. ஆதாரம் புகாரி (2988)

9. ஆதாரம் புகாரி (2637)  10.ஆதாரம் புகாரி (2038)