Thursday, July 23, 2015

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது, துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும், இலாபகரமாக அமைய வேண்டும், சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும், ஆனந்தமாக அமைய வேண்டும், இலக்குகளை அடைய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் நோக்கங்கள் இந்த ஐதீகத்தின் பின்னால் இருக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகளைச் சார்ந்த சடங்குகள் மதங்களையும் மொழிகளையும் நாடுகளையும் தாண்டி ஒருமைப்பட்டுக் கிடக்கின்றன. வார்த்தைகளும் அடையா ளங்களும் வேண்டுமானால் வேறுபடலாம். பிள்ளையார் சுழி (உ), சிலுவை, சங்கு, சக்கரம், லிங்கம், 786, பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப் படுத்துபவர்கள் யாவர், எம்மொழியினர், எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.

இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர். அதாவது சங்கம், இயக்கம், கட்சி, நிறுவனம், அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன் படுத்துகின்றனர்.
அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக் காரணம் ‘துவக்கம்’ என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான். ‘முதல்கோணல் முற்றிலும் கோணல்’, ‘THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION’ போன்ற பழமொழிகளும் இதiயே பிரதிபலிக்கின்றன.

இந்த வழக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் இடம்பெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதலாகும். திருமறை குர்ஆனுடைய துவக்கமே இதன் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதே இதற்குப் போதுமான சான்றாகும். அதாவது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து, இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! (பார்க்க அல்குர்ஆன்: 96:1)
இந்தச் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும், முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.

அது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே ‘இறைவனின் பெயரால்…’ என்று அமைந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக ‘ஓதுவீராக!’ என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.

எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் – இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது. அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.
படிப்பதற்கு முன்:
மேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.

எழுதுவதற்கு முன்:
ஸபா நாட்டு அரசிக்கு சுலைமான் (அலை) அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30)
நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ – முஸ்லிமில் உள்ளது.

உயிர்ப்பிராணிகளை அறுக்கும்போது:
நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்! (6:118)
நபி (ஸல்) அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ – முஸ்லிம்)

உழூ செய்வதற்கு முன்:
‘பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.

உண்பதற்கு முன்:
பிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா (ரழி) அறிவிக்கும் தகவல் புகாரீ – முஸ்லிமில் உள்ளது.
உண்ணும்போது பில்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதீ, அபூ தாவூதில் உள்ளது.

உறங்குவதற்கு முன்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே! உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)

வாகனத்தில் ஏறும்போது:
நபி (ஸல்) வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில் காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ (ரழி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)

ஓதிப்பார்க்கும்போது:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! நீங்கள் சிரமப்படுகிறீர்களா?’ பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)… என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி), நூல்: முஸ்லிம்.
யாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி… என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ – முஸ்லிமில் உள்ளது.
தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார், ‘உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் … கூறுவீராக!’ எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.

உடலுறவுக்குமுன்:
உங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ – முஸ்லிம்)

வீட்டிலிருந்து புறப்படும்போது:
ஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், திர்மிதீ)

வீட்டில் நுழையும்போது:
ஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரழி), நூல்: அபூ தாவூத்.
இப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இனி பிஸ்மில்லாஹ்வின் – இறை நாமத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)
நீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க! தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!… பாத்திரங்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!
உங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு மூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் (ரழி) மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா?
உண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரழி), நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும். இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.
குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் (ரழி) மூலம் நஸயீயில் உள்ளது.
இந்த அற்புதம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தி யுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

கைமேல் பலன் கிடைக்கும் இந்த நன்மையைப் பற்றி நமது தாய்மார்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் தொழுகையில்கூட அக்கறையில்லாத பலபெண்கள் உலையில் அரிசியை இடும்போது பிஸ்மில்லாஹ் கூறத் தவறுவதில்லை.
முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் பிஸ்மில்லாஹ்விற்குப்பகரமாக இலாஹி, 786 போன்றவற்றை எழுதுகின்றனர். இலாஹி என்று எழுதுவதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைக் காண முடியவில்லை. 786 என்பது ‘அப்ஜத்’ அரபி எண்ணியல் கணக்குப் பிரகாரம் பிஸ்மில்லாஹ்..வின் கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர். இரு காரணங்களால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.
முதலாவது காரணம் நபி (ஸல்) அவர்களில் அங்கீகாரம் இதற்கு இல்லை. அதற்கு மாறாக அன்னார் பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதியிருக்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களும் வேற்று நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ்வைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி மேலே கண்டோம். எனவே 786 போன்ற வாசகங்களை எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றிவிட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். மற்றொரு காரணம், 786 என்ற கூட்டுத் தொகை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் சொந்தமானதல்ல, மாறாக ஹரே கிருஷ்ணா போன்ற இஸ்லாத்திற்கே சம்பந்தமில்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும். ஏன் ஷைத்தான் மற்றும் ஃபிர்அவ்னின் மூலம் ஏற்படும் உதவி(யால்) என்ற கருத்துள்ள அவ்னன் பி ஃபிர்அவ்ன வ பி ஷைத்தான என்ற வாசகத்தின் எண்ணியல் கூட்டுத்தொகையும் 786 வரும்.
எண்ணியல் வழக்கத்தை அங்கீகரிக்கத் துவங்கினால் பல தீய விளைவுகள் ஏற்படும். இப்போதே கூட வாகனம், வீடு, உரிமங்கள் போன்றவற்றின் பதிவு மற்றும் அடையாள எண்களில் 786 வருவதை நல்ல சகுனமாகவும் இப்லீஸ் என்ற வார்த்தையின் கூட்டுத் தொகையான 103-ஐ அபசகுனமாகவும் பலர் கருதுகின்றனர். இன்னொரு இரகசியம் என்ன தெரியுமா? இப்படிப்பட்டவர்களில் பலர் பிஸ்மி என்று மட்டும் தங்கள் நிறுவனங்களுக்கோ உற்பத்திப் பொருட்களுக்கோ பெயர் வைத்துக் கொண்டு ஆனந்தமடைகின்றனர். பிஸ்மி என்பதன் கூட்டுத் தொகையும் 103 தான்.

அரசு, மற்றும் தனியார் நிறுவன பதிவுகளிலும் 786 என்கிற எண் கிடைப்பதற்காக காசு கொடுப்பதற்கு மக்கள் தயாராவதைப் போல எதேச்சையாக 103 கிடைத்து விட்டால் அதை மாற்றுவதற்குப் பணம் செலவழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
அது மட்டுமல்லாமல் விவரமறியாத பலரும் இந்த எண்ணை ஆபர அணிகலன்களில் பொறித்து மகிழ்வதும் அதற்கு மரியாதை செய்யும் வகையில் அதை முத்திக்கொள்வதும் அதைச் சட்டங்களில் அடக்கி சுவர்களில் மாட்டி அதற்குப் பக்தி முத்திரை குத்தி அதற்கு ஊதுபத்தி ஏற்றுவதும், பூச்சரங்கள் சாற்றுவதும் இன்றைய இஸ்லாமியக் கலாச்சாரமாய் அறிமுகமாகி வருகின்றன.
கலை நிகழ்ச்சிகளிலும் மாற்று மதச் சின்னங்களாக சிலுவை மற்றும் சிலைகளுக்கு நிகராக இந்த 786 தான் இஸ்லாத்தின் சார்பாக இடம் பெறுகின்றது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, கோட்பாடுகளுக்கு மாற்றமான ஷிர்க், பித்அத், பிற சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாதல் போன்ற தீமைகளை உள்ளடக்கிய இந்த எண்ணியல் வழக்கம் தேவைதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டால் அதன் மகத்துவம் தெரியாத சிலர் அதைக் கிழித்தோ அல்லது அசிங்கப்படுத்தியோ அதன் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்துகொள்ளக்கூடும். அதைத் தவிர்க்கவே 786-ஐ நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்று சிலர் காரணம் கூறுகின்றனர். மாற்றுமத அரசர்களுக்குக் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹ்வை எழுதிய நபி (ஸல்) அவர்களுக்கே ஏற்படாத அக்கறையா பிஸ்மில்லாஹ்வின் புனிதத்தைக் காப்பாற்று வதில் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது? இன்னும் சொல்லப்போனால் தாம் எழுதியனுப்பிய கடிதத்தைக் கிழித்துப்போட்டு கொச்சைப் படுத்திய பாரசீகநாட்டு மன்னரைச் சபித்த நபி (ஸல்), (பார்க்க: இப்னு அப்பாஸ் (ரழி) புகாரீயில்) இனி பிஸ்மில்லாஹ் எழுதக்கூடாது என்றோ அதற்கு மாற்றாக எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்றோ கூறியதில்லை.
இதைப்போலவே கடிதத்தின் ஆரம்பத்தில் இலாஹீ என்று எழுதுவதும் முறையல்ல. ஏனெனில் அவ்வாறு எழுதுவதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை.

எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை – மறுமையின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

No comments:

Post a Comment