Saturday, June 15, 2019

திக்ர் - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;(என் அருட்கொடைகளை மறுத்து) நன்றி மறவாதீர்கள்". (குர்ஆன் 2:152)


"இறைநம்பிகை கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள்" (குர்ஆன் 31:41)


"அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூரக்கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளன்". (குர்ஆன் 32:35)


மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற்க்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மெதுவான குரலிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! மோலும் அலட்சியமாய் இருப்பவர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்" (குர்ஆன் 7:205)


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் இறைவனை நினைவு கூருகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுகூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்"

நூல்: புகாரி -பத்ஹுல் பாரி (பாகம் 11 பக்கம் 208)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: நான் உங்களுக்கு ஓர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் இறைவ)னிடதில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது: மட்டுமல்ல, நிங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும்" தோழர்கள்: " அவசியம் கற்றுத் தாருங்கள் என்று. நபியவர்கள் கூறினார்கள்: 'அதுதான் அல்லாஹ்வை திக்ர் செய்வது-நினைவு கூர்வது' 

நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 459.இப்னுமாஜா: பாகம் 2. பக்கம் 1245.பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2. பக்கம் 316ஸஹீஹ் திர்மிதி பாகம்3. பக்கம் 139.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். 
நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.


அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" 
நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 458.இப்னுமாஜா பாகம்:2. பக்கம்: 1246.ஸஹீஹ் திர்மிதி பாகம்: 3. பக்கம்: 139.ஸஹீஹ் இப்னுமாஜா பாகம்: 2. பக்கம்: 317.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மையுண்டு. அந்த ஒரு நன்மை, அதே போன்று பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து". 

நூல்: திர்மிதி பாகம்: 5. பக்கம்: 175.ஸஹீஹ் திர்மிதி பாகம்:3. பக்கம்: 9.அல்ஜாமிஉஸ் ஸகீர் பாகம்:5 பக்கம்:340

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் ஸுஃப்பாவில் (மஸ்ஜிதின் முன் வராந்தாவின் திண்ணையில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள். அப்போது கூறினார்கள்: "தினமும் பத்ஹாவுக்கு அல்லது அகீகிற்கு சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு ஒட்டகங்களை பாவமோ, பந்த முறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புபவர் உங்களில் எவரும் உண்டா?" அதற்கு நாங்கள் கூறினோம்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்." நபியவர்கள் சொன்னார்கள்: "உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை கற்றுக் கொடுக்கவோ, ஓதவோ செய்யலாமே! இரண்டு வசனங்களை ஓதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ்வாறே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்" 

நூல்: ஸஹீஹுல் முஸ்லிம் பாகம்: 1. பக்கம்: 553.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்." 
நூல்: அபூதாவூத் பாகம்: 4. பக்கம்: 264

"எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத்துச் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியாதாகவே அமைந்து விடும். பிறகு அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான். அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்."

நூல்: திர்மிதி. பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம்:3. பக்கம்: 140

"ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமல் எழுந்தார்களேயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டுவிட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்!"

No comments:

Post a Comment