Wednesday, September 2, 2015

குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் நம்மைக் கடந்து விட்டது. வழக்கம் போல நோன்பு, இரவுத் தொழுகை, தர்மம் போன்ற நன்மைகளையும் அம்மாதத்தில் செய்தாகி விட்டது. இறுதியாக பெருநாள் தொழுகையும் தொழுதாயிற்று. அவ்வளவு தான் இனி அடுத்த வருட ரமலானில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்போடு ரமலானில் செய்து வந்த இறைவணக்கத்திலிருந்து பெருவாரியான மக்கள் ஒதுங்கி விடுகின்றனர். திருக்குர்ஆன் இத்தகைய செயலைத்தான் நம்மிடம் எதிர்பார்க்கின்றதா?
 
ரமலானில் அதிகமாக நாம் குர்ஆனுடன் தொடர்பில் இருந்தோம். நாமே குர்ஆனை ஓதுவதின் மூலமாகவும், இரவுத் தொழுகையில் இமாமிடமிருந்து குர்ஆனைச் செவியேற்பதின் மூலமாகவும் ஏனைய மாதங்களை விட ரமலானில் குர்ஆனுடன் அதிகளவில் நெருங்கியிருந்தோம். அந்த நெருக்கம் நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
 
ரமலானில் அருளப்பட்ட திருக்குர்ஆன் நம்மிடையே பல வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
 
பொதுவாகவே குர்ஆன் முஸ்லிம்களிடையே பல அதிசயிக்கத்தக்க மாற்றங்களை எளிதாக உண்டாக்கி விடும். அது குர்ஆனின் தனிச்சிறப்பு.
 
அல்லாஹ் இதைப் பின்வருமாறு கூறுகிறான்.
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அவை திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளன. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.
(அல்குர்ஆன் 39 23)
 
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5 83)
 
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் 8 2)
 
குர்ஆனை உளமாற செவியேற்றிடும் போது அது கண்களில் கண்ணீரை வரவழைப்பது, இறைநம்பிக்கையை அதிகப்படுத்துவது, மேனியைச் சிலிர்க்க செய்வது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தி விடும் என்று இந்த வசனங்களில் இறைவன் தெரிவிக்கின்றான்.
 
முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் கண்டிப்பாக இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து திருக்குர்ஆன் என்பது வெறுமனே கேட்டுவிட்டு செல்வதல்ல, அது நமக்குள் பல தாக்கங்களை உண்டாக்க வேண்டும். இதை இறைவன் விரும்புகிறான் என்பதை அறியலாம்.
குர்ஆன் ஏற்படுத்திய தாக்கத்தை நபித்தோழர்களின் வாழ்க்கையில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
 
குர்ஆனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன் நபித்தோழர்களின் வாழ்க்கை முறையையும் குர்ஆனை ஏற்றுக் கொண்டதற்கு பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டால் குர்ஆனுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் அது அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களையும் காணலாம்.
நபித்தோழர்களின் முந்தைய நிலை
பல நபித்தோழர்கள் அறியாமைக் காலத்தில் மது, மாது, சூது, கொலை, அபகரிப்பு போன்ற தவறான செயல்களிலேயே தங்கள் வாழ்வை அமைத்திருந்தார்கள். சுருக்கமாகச் சொல்வதெனில் நரகில் நுழைக்கும் அனைத்து செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
 
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 3 103)
 
நபித்தோழர்களும் அல்லாஹ்வின் இவ்வசனத்திற்கேற்ப தங்களின் முந்தைய வாழ்வைப் பற்றி சான்றளித்துள்ளார்கள்.
 
முஸ்லிம்கள் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்ற போது அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் இணைவைப்பாளர்கள் நஜ்ஜாஷி மன்னரிடம் முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைச் சொல்கின்றனர். தங்கள் நிலை குறித்து விளக்க வேண்டிய சூழல் முஸ்லிம்களுக்கு நேருகிறது. முஸ்லிம்களின் சார்பில் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நஜ்ஜாஷி மன்னருக்கு விளக்கமளிக்கின்றார்கள். அப்போது தங்களின் முந்தைய நிலையை ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது அறியாமைக் காலத்தில் நாங்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். இறந்தவற்றைச் சாப்பிடுபவர்களாகவும், மானக்கேடானவைகளைச் செய்பவர்களாகவும் சொந்தபந்தங்களை முறித்து அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தோம். எங்களில் பலமானவர் வறியவரை (அபகரித்து அவரது பொருளை) சாப்பிட்டு வந்தோம். இந்நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் வந்து அல்லாஹ் ஒருவனையே வணங்குமாறும், உண்மை பேசுமாறும், சொந்த பந்தங்களை இணைத்து வாழுமாறும் எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
(பார்க்க அஹ்மத் 1649)
 
இவ்வாறு வாக்குமூலம் அளிக்கின்றார்கள்.
அதாவது குர்ஆனை ஏற்றுக் கொள்ளும் முன் தங்கள் வாழ்க்கையில் தீமைகளுக்குப் பஞ்சமில்லை என்ற தங்களது நிலையைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
 
எனினும் குர்ஆனை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின் குர்ஆனின் போதனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதாவது குர்ஆன் அவர்களது வாழ்வில் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்கு சில சம்பவங்களை உதாரணமாகக் காணலாம்.
 
மதுவிலிருந்து விலகல்
குர்ஆனை ஏற்றுக் கொள்ளும் முன் பல நபித்தோழர்கள் மதுவிலேயே ஊறித்திளைத்தனர். மது அருந்துவது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை எனுமளவு சர்வ சாதரணமாய் மது அருந்தும் பழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். இஸ்லாத்திற்கு வந்த பிறகும் கூட மது தடை செய்யப்படாததால் அதிலிருந்து முற்றாக விலகவில்லை. இந்நிலையில் இருந்தவர்களை குர்ஆன் எப்படி மாற்றியது?
இதை பின்வரும் நிகழ்விலிருந்து அறியலாம்.
 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் "ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்குச் செய்தி எட்டியதா?'' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், "என்ன அது?'' என்று கேட்டனர். அவர், "மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், "அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டி விடுங்கள்'' என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல்: புகாரி 4617
 
எப்போது மது அருந்துவது தடை என்பது குறித்த இறைவசனம் இறங்கியதோ அப்போதிலிருந்து அதிகமான நபித்தோழர்கள் அதிலிருந்து முற்றாக விலகினார்கள். மதீனா நகரமே கொட்டப்பட்ட மதுவால் நிரம்பி காட்சியளித்தது என்றால் குர்ஆன் அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றத்தை எளிதாக உணரலாம்.
 
நாமும் பல தீமைகளைச் செய்கிறோம். ரமலான் மாதம் வந்தால் அத்தீமைகளுக்கு சில நாட்கள் விடுப்பு கொடுத்து விட்டு ரமலான் முடிந்ததும் அவைகளைத் திரும்ப அழைத்துக் கொள்கிறோம். குர்ஆன் இதைத் தான் விரும்புகிறதா? அப்படியெனில் குர்ஆன் நம்மிடையே ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் இத்தகைய மாற்றங்களை திருக்குர்ஆன் நம்மில் ஏற்படுத்தி விடும். உண்மையான முஸ்லிம்களுக்கே திருக்குர்ஆன் பலனளிக்கும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.
அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
(அல்குர்ஆன் 51 55)
 
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நபித்தோழர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடைய வாழ்விலும் குர்ஆன் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
எம்மாதிரியான மாற்றங்களை இந்த நபித்தோழரின் வாழ்க்கையில் திருமறை ஏற்படுத்தியது என்பதைப் பின்வரும் செய்தியில் அவர் மூலமாகவே அறியலாம்.
 
அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?'' என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்' என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
 
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னை விட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்து விட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
 
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?'' என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்'' என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர்பார்க்கிறேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.
முஸ்லிம் 192
 
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் முதலில் நபிகளாரையே கொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குர்ஆனை ஏற்ற பின் நபிகளார் மீது எல்லையற்ற, அளப்பரிய நேசம் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்கள். நபிகளாரை நேசித்தது போன்று வேறு யாரையும் தான் நேசிக்கவில்லை எனுமளவு அந்த பிரியம் இருந்தது என்றால் திருக்குர்ஆன் அம்ர் (ரலி) அவர்களை எப்படி மாற்றியுள்ளது என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
காலித் பின் வலீத், அபூஸூஃப்யான்
குர்ஆன் யாரை? எப்படி மாற்றியது? எனும் இந்தப் பட்டியலில் இவர்களையும் விட்டு விட முடியாது.
 
ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தது மட்டுமில்லாமல் எதிரிகளின் மூளையாகவும் செயல்பட்டு நபிகளாரைக் கொல்ல சந்தர்ப்பம் தேடியவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தில் தங்களை இணைத்து, குர்ஆனை ஏற்றுக் கொண்ட பிறகு யாரது உயிரை எடுக்க காத்திருந்தார்களோ அந்த அண்ணல் நபி அவர்களுக்காக தங்கள் உயிரைக் கூட அர்ப்பணம் செய்ய முன்வருபவர்களாய் மாறினார்கள்.
 
இதில் பல நபித்தோழர்கள் அடங்குவார்கள் என்றாலும் காலித் பின் வலீத் (ரலி) குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
 
முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இணைவைப்பாளர்கள் சார்பில் முஸ்லிம்களை வேவு பார்க்கும் ஒற்றராகவும் காலித் (ரலி அவர்கள் செயல்பட்டார்கள். உஹது போர்க்களத்தில் முஸ்லிம்களைச் சிதறடித்ததில் காலித் பின் வலீத் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
(பார்க்க புகாரி 2732)
 
குர்ஆன் அவரை எப்படி மாற்றியது என்பது பற்றி நபிகளார் கூறிய செய்தியை பாருங்கள்.
“"(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் பின்ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்'' என்று நபி (ஸல்) கூறிக் கொண்டிருந்தபோது அவர்களது இரு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படாதிருந்த காலித் பின் வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது'' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி),
நூல் : புகாரி 1246
 
இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று செயல்பட்டவரை இஸ்லாத்திற்காக தன்னுயிரை அர்ப்பணம் செய்யும் அளவிற்கு குர்ஆன் அவரை மாற்றியது என்றால் என்ன ஒரு அபார மாற்றம்?
இஸ்லாமிய அணி சார்பாக பல போர்களுக்கு படைத்தளபதியாக செயல்பட்டு பல வெற்றிகளை இறையருளால் அள்ளிக் குவித்தார்.
இறுதியில் நபிகளாரால் அல்லாஹ்வின் போர்வாள் என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.
(புகாரி 3757)
 
இப்படி குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடைக்கின்றன. அவற்றை ஒரு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. இங்கே சொல்லப்பட்டவகளை விட சொல்லப்படாத செய்திகள் அதிகம் உள்ளது.
எண்ணற்ற நபித்தோழர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்களை அசாதரணமாக திருக்குர்ஆன் ஏற்படுத்தியது. ரமலானில் மட்டும் மாற்றம் என்றில்லாமல் அத்தகைய மாற்றங்களை நம் வாழ்விலும் எப்போதும் ஏற்பட வல்லோன் இறைவனை பிரார்த்திப்போமாக.

No comments:

Post a Comment